Monday, September 1, 2014

விடிந்தும் விடியாத விடுதலை!

நள்ளிரவில் வாங்கினோம், இன்னும் எங்களுக்கு விடியவில்லை..” என்பவர்களும், ‘எங்கள் வீட்டு கம்பத்திற்கு கொடி கொடுத்த விடுதலை எங்களுக்கு வீட்டை கொடுக்க வில்லைஎன்று புலம்புவர்களுக்கும் இடையே மலேசியா போன்ற ஒரு நாடு கிடைக்காது என்ற எண்ணத்தை கொண்டவர்களில் நானும் ஒருவன்.

ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்றதிற்கு பல காரணங்கள் இருப்பினும், நமது நாட்டிற்கு விடுதலை என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகும்இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிறகு ஆசியாவில் இருந்த ஆங்கிலேயர்களின் வெளியேற்றம் ஒரு நிர்பந்த நிகழ்வாகும். தேசிய உணர்வுக்கு உந்தப்பட்ட மக்கள் விடுதலை காற்றை சுவாசிக்க தயாரானர்கள்.
மலாயாவின் விடுதலை ஓர் உண்ணதக் கனவாகும். இது எங்களின் தேசம். இந்த நாடு எங்கள் நாடு என உரிமை கொண்டு மார்தட்டும் ஒரு நிகழ்வாகும்.
அதுவே, நமது நாட்டுக்கு நாம்தான் இனி பொறுப்பு என மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து சொந்தமாக ஆட்சி செய்ய முடிவெடுத்த நாளாகும்.
நமக்கான சட்டம், நமக்கான நாடாளுமன்றம், அமைச்சரவை என மக்களே முடிவு செய்ய அரசமைப்பு சட்ட வழிமுறை வகுக்கப்பட்டது. அதில் மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை கொடுக்கப்பட்டு அதன் படி மக்களே தங்களை நிர்வகிக்கும் அரசாங்கத்தை அமைக்கும் பொறுப்பையும் பெற்றனர்.
மக்கள் நினைத்தால் அரசாங்கத்தை மாற்றலாம். அதன்வழி பிரதமரை மாற்றலாம். அமைச்சர்களை மாற்றலாம். அரசமைப்பு முறையில் கூட மாற்றங்களை கொண்டு வரலாம். அதன்வழி சட்டங்களையும் மாற்றலாம். இவையெல்லாம் மக்களுக்கு கிடைத்த அதிகாரம். இதற்கு பெயர்தான் சனநாயகம்.

இப்படி எதையும் செய்யும் ஆற்றலை மக்கள் பெற்றனர். இந்த ஆற்றலை கொண்டு அரசாங்கத்தை அமைத்து அதன் வழி நாட்டை செம்மை படுத்தி அதில் வாழும் மக்களுக்கு நாட்டின் தரதிற்கு ஏற்ற வாழ்க்கையும் வாழ்வாதாரமும் கிடைக்கும் சூழ்நிலையை உருவாக்கி இருக்க வேண்டும்.
அதுதான் மக்களின் உண்மையான விடுதலைக்கான அடையாளம் ஆகும்.
ஆனால், இனவாதமும் மதவாதமும் உள்வாக்கப்பட்ட நிலையில், ஓர் ஆதிக்க இனவாத அரசியல் முறையை உருவாக்க நாம் அனைவருமே இணைந்து பங்காற்றியுள்ளோம்.

பல்லின மக்களும் பல்வகை பண்பாடும் கொண்ட நமது நாட்டில் போதுமான வளங்கள் உள்ளன. ஆம், நாம் ஒரு பணக்கார நாடு. இங்கு வறுமை இருந்தால் அது ஒரு மானக்கேடாகும்.
பல நிலைகளில் முன்னேற்றம் கண்டு, இன்று உலகில் வளரும் நாடுகளில் முன்னணி வகிக்கும் மலேசியா தன்னுள்ளே கொண்டுள்ள மோசமான குறைபாடுகளை களைய வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது. நீண்ட கால ஆட்சியை நடத்தும் ஒரே கட்சி, தொடர்ந்து நாட்டை குத்தகைக்கு எடுத்துக்கொண்டது போல் அரசாங்க இயந்திரத்தை தன்னுடமையாக்கி தன்னை தற்காத்துகொள்கிறது. இன-மத அடையாளங்கள் வழி பிரிவினைகளை ஆழமாக்கி, சிறுபான்மையினரை இரண்டாம்தர குடிமக்களாக மதிப்பீடு செய்கின்றனர்.

நாம் உருவாக்கிய விடுதலை மலேசியாவில் விடுதலை உணர்வு பெற்ற நாம் இன்று நமது நாட்டை மக்களுக்குகென மீட்டெடுக்கும் தாகத்தில் உள்ளோம்.
இந்த 57 ஆவது சுதந்திர தினம் நமக்கு ஒரு புதிய விழிப்புணர்சியை தூண்டும் நாள். இந்த நாடு நமது நாடு. இதில் பிறந்த நமக்கு வேறு நாடு கிடையாது. நமது நாட்டின் மண்வாசனை நிரம்பிய நமது ஒவ்வொரு சுவாசமும், நமது தேசப்பற்றையும் அதோடு கலந்த தேசப்பொறுப்பையும் உணர்த்தும்.
அந்தப் பொறுப்பு தாகமாகி செயலாக்கம் காணும் போதுவிடுதலை அனைத்து மக்களுக்குமானது என்ற பரிமாணத்தை எட்டுகிறது.

(கா. ஆறுமுகம்)

http://www.semparuthi.com/?p=113296

No comments:

Post a Comment